search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் கலெக்டர் அலுவலகம்"

    வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) அவரது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மண் எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து மண் எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றி ரேவதி கூறுகையில், எனது கணவர் இறந்துவிட்டார்.அவரது இன்சூரன்ஸ் பணம் வந்தது.அதனை ஜோலார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடனாக பெற்றார். அந்த பணத்தை தற்போது தரமறுக்கிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அதனை வாங்க மறுக்கின்றனர். அதனால் குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்தேன் என்றார். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுகொடுக்க வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.

    அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.

    விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யடுவார்கள். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    டிரைவர் பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம்162.5 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    டிரைவிங் லைசென்ஸ், பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு மனிதவள நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடத்தப்படும்.

    மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இ.எம்.டி. பிரிவினருக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பாம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

    இ.எம்.டி. டிரெய்னி பிரிவுக்கு ஓராண்டு டெக்னீசியன் கோர்ஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணுவை இந்து அமைப்பினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணமாக இன்று வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பிறகு, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது, நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் அணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணையாற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த கமிட்டிக்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற கமிட்டி என்றால் எங்களுக்கு தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சரை அழைப்போம். முதல்- அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அய்யாக்கண்ணு மோடி மீது விமர்சனம் வைத்ததால், அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக பாடை கட்டி வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தனர். மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று ஒருமையில் பேசினர்.

    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். பின்னர், இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே, திருச்செந்தூரில் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக் கண்ணுவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×